கரூர்/சென்னை: கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாக 7 பேர் மீது சப்-ரிஜிஸ்டிரார் (பொ) மேலகரூர் முகமது அப்துல்காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தனது பெயரும் இடம்பெறலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஜூன் 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
13 பேர் மீது வழக்குப் பதிவு: பின்னர், உடல்நிலை சரியில்லாத தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், முன்ஜாமீன் கேட்டு மீண்டும் அவர் தாக்கல் செய்த மனு கடந்த 6ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீஸார் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, பதிவாளர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் சண்டல்மேடு தாளப்பட்டி யுவராஜ், தோட்டக்குறிச்சி செல்வராஜ், கவுண்டம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். இந்நிலையில், கரூர் ஆண்டாங்கோவில் என்எஸ்ஆர் நகர் குடியிருப்பில் உள்ள திரு.விஜயபாஸ்கர் வீடு, ரெயின்போ நகர் பகுதியில் உள்ள விசைத்தறி, கரூர் திருவிக் சாலையில் உள்ள எம்ஆர்வி அறக்கட்டளை அலுவலகம், பெட்ரோல் நிலையம், என்எஸ்ஆர் நகரில் உள்ள அவரது ஆதரவாளர் ராஜேந்திரன் வீடு ஆகிய 5 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். நேற்று காலை 7 மணி. மதியம் 3 மணி முதல் 3 மணி வரை 8 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விஜயபாஸ்கர் வீட்டில் பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ரெயின்போ நகர் குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் வீடு, செங்குண்டாபுரத்தில் உள்ள முன்னாள் நேர்முக உதவியாளர் கார்த்தி வீடு ஆகிய 2 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். வீடு பூட்டி இருந்ததால், அங்கு சோதனை நடத்தப்படவில்லை. சென்னையில் தேடுதல் வேட்டை: சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுந்தரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை 7.15 மணியளவில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். பின்னர், அங்கிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.