சென்னை: 300 சதுர மீட்டர் அகலம் மற்றும் 14 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து மின்சார வாரியம் விலக்கு அளித்துள்ளது.
தமிழகத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றால் மட்டுமே, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வழங்கும். வீடுகளைப் பொறுத்தமட்டில், 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ் பெறுவதற்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் பாதிப்பு: இருப்பினும், வணிகத் துறை கட்டடங்களுக்கு இந்தச் சலுகை இல்லை. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, 300 சதுர மீட்டர் அகலம் மற்றும் 14 மீட்டர் உயரத்துக்கு மிகாமல் உள்ள வணிகக் கட்டடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ் பெறத் தேவையில்லை என அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், அரசு உத்தரவை தொடர்ந்து வணிகப்பிரிவில் மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்டு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டு, நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. சிறுதொழில்களுக்கு பலன்: இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ”300 சதுர மீட்டர் அகலம், 14 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு, நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறுந்தொழில் துறையைச் சேர்ந்த தொழில் முனைவோர் நிறைவுச் சான்றிதழ் கிடைக்காததால் மின் இணைப்பு பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தற்காலிக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தனர். தற்போது, சிறிய சதுர அடி கட்டடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், சிறு தொழில்கள் பயனடையும்.