திருச்சி: நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றும் ரூ.10 கோடியில் சாரணர் இயக்கத்தின் புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பெருந்திரளணி `ஜாம்புரி’ என்ற பெயரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்து சுமார் 20,000 சாரண-சாரணியர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை கடந்த 28-ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் அங்கேயே தங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில், திருச்சியில் வைரவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு சாரணர் இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம், நவீன பயிற்சி வசதிகளோடு ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்.
மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும். மானிட தத்துவத்தால் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளம் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு பெரும் புகழை ஈட்டித் தருகிறது பள்ளிக் கல்வித்துறை. இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர் அமைச்சர் அன்பில் மகேஷ். இவர் தலைமையில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான நிதி ஆயோக் அறிக்கையில் 17 இலக்குகளிலும் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது.
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கருணாநிதி. சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்” என தெரிவித்தார்.