திருப்பரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க போராடுபவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:- மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையில் உள்ள ஆறுபடையில் முதல் வீட்டை சிக்கந்தர் மலையாக மாற்ற ஒரு கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன், அங்கு ஆடு பலியிட சென்றவர்களால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் எம்.பி. நவஸ்கனி பிரியாணி சாப்பிட்டு மலையின் புனிதத்தை கெடுத்துள்ளார். இது தமிழ்க் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் செயலாகும்.
இது பக்தர்களின் மனதை புண்படுத்துவதுடன், இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும் பாரம்பரியத்தையும் பறிக்கும் செயலாகும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இப்பிரச்னை குறித்து, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க, வரும் 4-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த, இந்து முன்னணியினர் திட்டமிட்டுள்ளனர்.