சென்னை: மாவட்ட வாரியாக அணிகளுக்கான தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்தி, கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ம.தி.மு.க., தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- ம.தி.மு.க.,வுக்கு, புதுச்சேரி, காரைக்கால் உட்பட, அமைப்பு ரீதியாக, 69 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை பேரூர், ஒன்றிய, கிளை அளவில் பலப்படுத்த தலைமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகளில், கட்சியை வலுவாக வைத்திருக்க, தலைமையும் கண்டிப்பான உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதன்பேரில், தலைமை நிர்வாகிகள் தொடர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு.செந்திலதீபன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர்.
அப்போது, உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கூறியுள்ளனர். இரண்டாம் கட்டமாக மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடத்துவது தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, வேலூர், செங்கல்பட்டு, திருவாரூரில் நாளை முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 6 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆ.நாசீர்கான், துணைப் பொதுச் செயலர்கள் தலைமை வகிக்கின்றனர்.
மல்லை சி.ஏ. சத்யா, மற்றும் ஆடுதுறை இரா. முருகன். தலைமையின் அறிவுறுத்தலின்படி, அரசியல் ஆய்வு மையச் செயலர் ஆவடி இரா.அந்திரிதாஸ், கொள்கை விளக்கக் குழுச் செயலர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் தமிழகம் முழுவதும் 6 மண்டலங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
அதன்பின், பொதுக்கூட்டம், மாநாடு போன்றவை நடைபெறும். இது தவிர மண்டல அளவில் இணைந்த அணிகளுக்கான பயிற்சி முகாம் மார்ச் மாதம் முதல் நடத்த உள்ளோம். மண்டல வாரியாக 200 பேர் பங்கேற்கும் முகாம் கூட்டம், கருத்தரங்கு, பேச்சாளர் பயிற்சி முகாம் போன்றவை நடத்தப்படும். இதனால், ஆண்டு முழுவதும் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.