நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹல் புதுடெல்லியில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் அறிவித்தார். மாநிலங்களுக்குள் உள்ள முக்கிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சில முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து இடங்கள் உடான் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், சேலத்திலிருந்து ஏற்கனவே விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, தற்போது லைசென்ஸ் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த இரண்டு ஊர்களிலும் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது.
ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில், விமான நிலைய அணுகு சாலைக்கான நிலம் ஒதுக்கப்பட்டதும் கட்டடப்பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இல்லாத நிலையில் உள்ள அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் விமான ஓடுபாதைகளை சீரமைத்து, அவற்றை உடான் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடான் திட்டம் வணிக அடிப்படையிலான திட்டமாகும். ஒரு புதிய விமான சேவை தொடங்கப்படும்போது, அதற்கான மக்களின் வரவேற்பு, பயணிகளின் தேவை மற்றும் வருவாய் நிலை போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு ஏலம் நடைபெறும்.
விமான நிறுவனங்கள் இதுபோன்ற புதிய மார்க்கங்களை கண்காணித்து, ஏலத்தில் பங்கேற்கும். ஏலத்தில் வெற்றி பெறும் தகுதியான நிறுவனங்களுக்கு அந்த விமான சேவையை இயக்க அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் முரளிதர் மொஹல் கூறினார்.