சென்னை: தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கை:- டெல்டா அல்லாத மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு 14.2.2014 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி வருகிறது.
முதல்வர் மு.க., ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு பின் மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதை முறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தேவையான இடங்களில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் தவிர, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கையை பரிசீலித்து ஒரு சில இடங்களில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் செய்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் நெல் கொள்முதல் நிலையங்களிலும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நடத்தும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஒரே விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், பா.ம.க., நிறுவனர் இதை அறியாமலோ, தெரியாமலோ, 2016-ல் இருந்து நடக்கும் நெல் கொள்முதல் பணி குறித்து கருத்து தெரிவிப்பது சரியா என்பதை யோசிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.