காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 1,907 ஏக்கரில் செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை உள்ளது. 1944-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது இங்கு 2 விமான ஓடுதளங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை இதுவரை பெரிய அளவில் சேதம் அடையவில்லை. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள் நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு அடிக்கடி விமானம் மூலம் சென்று வருகின்றனர்.
இதுதவிர கல்விக்காகவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்பவர்களும் ஏராளம். மேலும், காரைக்குடி, செட்டிநாடு, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆத்தங்குடி டைல்ஸ், செட்டிநாடு கண்டாங்கி புடவைகள், அரியக்குடி குத்துவிளக்கு, செட்டிநாட்டு கலைப்பொருட்கள் உலகப் புகழ் பெற்றவை. இவற்றை வாங்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
மேலும், இந்தப் பகுதிகளில் அடிக்கடி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சினிமா துறையினரும் அதிக அளவில் வருகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காரைக்குடி பகுதியில் விமான சேவை முக்கிய தேவையாக உள்ளது. நவம்பர் 2018-ல், இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ‘உடான்’ திட்டத்தின் கீழ் செட்டிநாட்டில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே ஆய்வு செய்தனர்.
அதன்பின், பைலட் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நேமத்தான்பட்டி ரயில் நிலைய மீட்புக் குழுவினர், காரைக்குடி தொழில் வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சாமி திராவிடமணி, செயலர் கண்ணப்பன் கூறியதாவது:-
விமானத்தில் பயணம் செய்யக்கூடிய முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி காரைக்குடி. மேலும், விமான நிலையம் அமைக்க தேவையான நிலம் மற்றும் ஓடுபாதை உள்ளது. எனவே, விமான நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் காரைக்குடி பகுதியும் வளர்ச்சி அடையும். இவ்வாறு கூறினார்கள்.