புதுச்சேரி: புதுச்சேரி சுதேசி மில் அருகே ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, எல்பிஎஃப், ஏஐசிசிடியு, எல்எல்எப், எம்எல்எப், என்டிஎல்எப் என அனைத்து தொழிற்சங்கத்தினர் திரண்டு மத்திய பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் ஏஐடியுசி மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன், ஐஎன்டியுசி மாநில பொது செயலாளர் ஞானசேகரன், எல்பிஎப் மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறி மத்திய பட்ஜெட் நகலை எரித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் தெளித்து அணைத்து நகல்களை மீட்டனர். நிர்வாகிகள் கூறுகையில், ”மத்திய பட்ஜெட் அறிக்கையில், தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்கள் குறித்து, அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் அளித்துள்ள எந்த ஆலோசனையையும், மத்திய அரசு அமல்படுத்தப் போவதில்லை என, அமைச்சருடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தை உறுதியானது.
மேலும், தொழிலாளர்களின் நலன்களை அடிமைப்படுத்தும் தொழிலாளர் சட்டங்களை மூலதனத்திற்கு நிதியளிப்பதற்கு மாநில அரசுகளை மத்திய அரசு தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய பாஜக அரசின் பட்ஜெட் அறிக்கையில் மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைகள் எதுவும் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறவில்லை. தொழிலாளர்களின் நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்தினோம்,” என்றனர்.