சென்னையில் காவல்துறையின் மிக முக்கிய விருதான ‘முதல்வரின் காவலர் பதக்கம்’ வழங்கும் விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த ஆண்டு 770 காவலர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சென்னை காவல் ஆணையர் அருண் பேசினார். அவர், காவல்துறையின் பணியை அரசு பணி என்றதை விட மக்கள் பணி எனக் கருத வேண்டும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுடன் காவல்துறையை அணுகும் போது, போலீஸார் பரிவோடு கேட்டுத் தீர்வு வழங்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பாராட்டு பெறுவதே காவல்துறைக்கு கிடைக்கும் மிக முக்கியமான விருதாக அமையும் என்றும் அவர் கூறினார்.
சென்னை காவலில் 23,000 போலீஸார் பணிபுரிகின்றனர். இதில் சிலர் தவறு செய்யும்போது, அர்ப்பணிப்போடு பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் அது இழுக்காக அமைகிறது. எனவே, ஒவ்வொரு காவலரும் தமது பணியை நேர்மையாக செய்ய வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார்.
இந்த விழாவில் கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர். விழாவின் இறுதியில் விருது பெற்ற காவலர்களுடன் காவல் ஆணையர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.