தமிழகத்தின் சில பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிராக அரங்கேறிய பாலியல் வன்கொடுமைகள் குறித்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில், 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர்.
பெற்றோர்கள், பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில், அதுவே அச்சுறுத்தலாக மாறிவருவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். தவறு செய்த ஆசிரியர்கள் பணியிட மாற்றம் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரும் வேறு பள்ளிகளில் பணியை தொடரும் நிலைமை தொடர்வதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய, குற்றவாளிகள் மீது நேரடியாக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு முழு சமூகத்திற்கே உரியது எனக் கூறி, ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். பள்ளிக் கல்வித்துறை குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமின்றி நிரந்தரத் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாமில் 13 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திலும், 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை மாணவர்களின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்த வகை குற்றங்களை கட்டுப்படுத்த, பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, மாணவர் மனசு புகார் பெட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.