கோவை: கோவையில் இன்று காலை பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
கோவை விமான நிலையம் அருகே இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால், விமானம் புறப்படும் மற்றும் தரையிறங்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் கோவையில் தரையிறங்க முடியாமல் 20 நிமிடங்களுக்கு மேல் கோவை வான்வெளியில் வட்டமடித்தது. நிலைமை சீரடையாததால், விமானம் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல், கோவையில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் குறித்த நேரத்தில் பயணிக்க முடியாமல் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.