ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று மாலைக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும். தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
முன்னணி நிலை @ 9 AM
திமுக – 2,586
நாதக – 391
வித்யாசம் – 2,195

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானதை அடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். இந்தியா கூட்டணியில் இருந்து மா.கி.சீதாலட்சுமி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 13 வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் 2,27,546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இடைத்தேர்தலின் முடிவில் 74,260 ஆண்கள், 80,376 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,54,657 வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் 67.97. மேலும், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் 246 தபால் வாக்குகள், ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் 4 பேர், சிறையில் உள்ள ஒருவர் என 251 வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் 76 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, துணை ராணுவத்தினர் உள்பட 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா, எஸ்பி ஜவஹர், தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் சீல் திறக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு பகுதியில் பதிவான தபால் ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் ஒரே மேஜையில் எண்ணப்பட்டன.
ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர் என மொத்தம் 51 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். மொத்தம் 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க சராசரியாக 25 நிமிடங்கள் ஆகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.