ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபின், அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. திமுக வெற்றி உறுதியானதும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபோது, திமுக தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்து திமுகவினர் வெற்றியை கொண்டாடினர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று வரலாற்றை படைத்துள்ளது. திமுக சார்பாக போட்டியிட்ட விசி சந்திரகுமார் 1,14,439 வாக்குகளைப் பெற்று வென்றார். இதனிடையே, 45 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்ததாக தெரியவந்துள்ளது. 2வது இடத்தில் நாதக சார்பாக போட்டியிட்ட சீதாலட்சுமி 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
கடந்த சில வாரங்களாக நாதக ஒருங்கிணைப்பாளர் பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார். இப்போது, பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் தொகையை இழந்து தோல்வி அடைந்துள்ளது, இது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது, 75 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை சந்திரகுமார் பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, சந்திரகுமார் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரம் இந்த இடைத்தேர்தல் வெற்றி என்றார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபின், ஈரோட்டிலும், சென்னை அண்ணா அறிவாலயத்திலும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பக்கம் இனிப்புகளை வழங்கி திமுகவினர் கொண்டாட, இன்னொரு பக்கம் பட்டாசுகளை வெடித்து, மேளம் அடித்து, டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.