சென்னை: புருவங்களை பராமரிக்க… பெண்களின் முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவை புருவங்கள். பெண்களின் வில் போன்று வளைந்து இருக்கும் அவை, பார்ப்பவர்களை வசீகரிக்கக்கூடியவை. ஆனால், தற்போது பல பெண்களுக்கு புருவ முடிகளின் வளர்ச்சி குறைவாக உள்ளது. இதன் காரணமாக செயற்கையாக ‘ஐ புரோ பென்சில்’ கொண்டு புருவங்களைத் தீட்டிக்கொள்கிறார்கள்.
புருவ முடிகள் சீராக வளர்ச்சி அடைந்து, புருவங்கள் அடர்த்தியாக காட்சி அளிப்பதற்கு இயற்கையான வழிகளை கடைப்பிடிக்கலாம். அதுபற்றிய சில விஷயங்கள்:
முடி வளர்ச்சிக்கு: ஒரு சில பெண்களுக்கு புருவத்தில் ஆங்காங்கே முடிகள் இல்லாமல் திட்டுத்திட்டாக இடைவெளி இருக்கும். இவர்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு சில துளிகள் விளக்கெண்ணெய்யை புருவங்களின் மீது பூசி மென்மையாக மசாஜ் செய்யலாம்.
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்தும் புருவத்தில் பூசி மசாஜ் செய்யலாம். எண்ணெய் பூசுவதற்கு முன்பு புருவப் பகுதியை லேசாக 2 அல்லது 3 முறை கிள்ளி விடவும். இவ்வாறு செய்வதால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் புருவ முடிகள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.
புருவங்களை முறையாக பராமரிப்பது அவசியமாகும். இல்லையென்றால், அவற் றில் பொடுகு பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தினமும் புருவங்களில் ஆலிவ் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வரலாம். இவ்வாறு செய்வதால் பொடுகு நீங்குவதோடு புருவ முடிகள் மிருதுவாகவும், வசீகரமாகவும் மாறும்.