சண்டிகர்: தானே ஜிலேபியை தயாரித்து, தமது கைகளினால் அனைவருக்கும் வழங்கி டில்லி தேர்தல் வெற்றியை ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கொண்டாடி உள்ளார். தலைநகர் புதுடில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வரலாற்று வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ., வெற்றியை டில்லி மட்டும் அல்லாது நாடு முழுவதும் உள்ள பா.ஜ., வினர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பா.ஜ., வெற்றியைக் கொண்டாடி உள்ளார். வித்தியாசமாக அவர் தானே தயாரித்த ஜிலேபியை, முக்கிய தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் விநியோகித்து மகிழ்ந்துள்ளார். ஜிலேபியை அவர், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய பிரதேச அமைச்சர் கைலேஷ் விஜய்வர்கியாவுக்கும் ஊட்டிவிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; டில்லி மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் தமது தேர்தல் தோல்விக்கு மற்றவர்களை கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார். பா.ஜ., வுக்கு மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்துள்ளனர்.
10 ஆண்டுகளாக இங்கு இருந்த ஆம் ஆத்மி அரசு பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்திருக்கிறது. மக்களை முன்னேற்றுவதற்கான எந்த திட்டங்களையும் அவர்கள் செயல்படுத்தவில்லை.
யமுனை நதியை சுத்தம் செய்யாவிட்டால் ஓட்டு கேட்க மாட்டேன் என்று கெஜ்ரிவால் கூறினார். பின்னர் யமுனையில் விஷம் கலந்து விட்டதாக குற்றம்சாட்டினார். அதை மக்கள் புரிந்துகொண்டு பா.ஜ., ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.