நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இதில் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் 21-ம் தேதி வெளியிடுகிறார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. எஸ்.ஜே. சூர்யா, அருண் விஜய், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், எஸ்.ஜே. சூர்யா கூறியதாவது:- ஜாலியா வாங்க, ஜாலியா போங்க மாதிரி இந்தப் படம் இருக்கும். சினிமாவில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது. புதிய நடிகர்கள் தேவை. அதற்காக ஒரு பட்டாளத்தை உருவாக்கி அனுப்பியுள்ளார் நடிகர் தனுஷ். அருமையான கதைக்களம் இது. இயக்குனர் கே.பாலசந்தர் சாரும் ஆனந்து சாரும் கடந்த காலத்தில் இணைந்து செய்ததை தனுஷ் செய்திருக்கிறார். பெரிய தத்துவங்களை எளிமையாக விளக்கியிருக்கிறார். இன்றைய இளைஞர்களின் மனநிலையை மிகச்சிறப்பாக படம்பிடித்துள்ளார்.
‘ராயன்’ போன்ற படத்தை இயக்கிய அவர், அடுத்து இப்படி ஒரு கதையை உருவாக்குவது ஆச்சரியமாக உள்ளது. அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தனுஷ் ஒரு சர்வதேச படத்தை தயாரிக்கிறார். இந்தியில் நடிக்கிறார். அவரே இயக்கி நடிக்கிறார். மற்ற நடிகர்களை இயக்குகிறார், தயாரிக்கிறார்… அனைத்தையும் எளிமையாகச் செய்கிறார். ஆச்சரியமாக இருக்கிறது. இதில் நடித்துள்ள பவிஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சரியான இயக்குனர்களின் படங்களில் நடித்தால் அவருக்கு சினிமாவில் பெரிய இடம் உண்டு. இவ்வாறு எஸ்.ஜே. சூரியா கூறினார்.