பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவர் பயணம் செய்த விமானத்திற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். நேற்று பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் அமெரிக்கா சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஒருவர், பிரதமர் மோடியின் விமானம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்த அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மிரட்டலின் தீவிரம் கருதி, மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணையை துவக்கியுள்ளோம். ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது, பின்னர் தெரியவந்தது. பிரதமர் மோடிக்கு மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், மும்பை போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் வந்தது. அதில் இரண்டு ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் சம்பந்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் சதி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது தவிர, கடந்த ஆண்டு, பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கண்டிவிலியைச் சேர்ந்த 34 வயது ஷீத்தல் சவான் என்பவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.