சென்னை: வெளிநாடுகளில் இருந்து வரும் நிலக்கரி இறக்குமதியை ஆண்டுக்கு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் 5,120 மெகாவாட் திறன் கொண்ட 6 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில் 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை-3 மின் நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இது தவிர மற்ற அனல் மின் நிலையங்களுக்கு தினமும் 85 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்ய 62 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இது ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த 2022-23ம் ஆண்டில் நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஆண்டுக்கு 6 சதவீத வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழகம் உள்ளிட்ட பல மாநில மின் வாரியங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எழுதிய கடிதத்தில் உத்தரவிட்டது.
தமிழ்நாடு மின் வாரியமும் 2022-23ல் 15.80 லட்சம் டன் நிலக்கரியையும், 2023-24ல் 6.25 லட்சம் டன் நிலக்கரியையும் வெளிநாடுகளில் இருந்து சந்தை விலைக்கு ஏற்ப விலை மாறுபடும் விலையில் இறக்குமதி செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டை விட உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2023-24ம் ஆண்டில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 2.20 கோடி டன் நிலக்கரி கிடைத்தது. இது 2022-23ல் 1.92 கோடி டன்னாக இருந்தது.
நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பால், வெளிநாடுகளில் இருந்து அனுமதிக்கப்பட்ட நிலக்கரி இறக்குமதியை ஆண்டுக்கு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க அனைத்து மாநில மின் வாரியங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.