புதுடெல்லி: நகர்ப்புறங்களில் உள்ள வீடற்றவர்களின் தங்குமிடம் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய அரசுக்கு தொடர் கேள்விகளை எழுப்பினர். அதில், தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பின்னரும் இலவசங்களால் மக்கள் வேலை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதில், அனைத்து தரப்பு மக்களையும் சமூகத்தில் முக்கிய உறுப்பினர்களாக ஆக்கி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனுமதிக்க வேண்டும்.
இது அரசு செய்யும் நல்ல விஷயம். குறிப்பாக இலவச ரேஷன் மற்றும் நிதி உதவி காரணமாக, மக்கள் வேலைக்கு செல்ல விரும்பவில்லை. உண்மையைச் சொல்வதானால், பணம் உட்பட அனைத்தையும் இலவசமாகப் பெறுகிறார்கள். இதனால் மக்களுக்கு வேலை செய்ய ஆசை இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் மக்கள் மீதான அக்கறையை பாராட்டுகின்றோம். ஆனால் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனுமதிப்பது நல்லது. அதை விடுத்து அவர்களுக்கு இலவசங்களை கொடுத்து எதையும் செய்ய விடாமல் இருப்பது சரியல்ல. எனவே, நகர்ப்புற வறுமை ஒழிப்புப் பணி எவ்வளவு காலம் முடிவடையும், எப்படி முடிவடையும், அதைச் சரிபார்க்கும் கோணங்கள் என்ன என்பது குறித்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.