புதுடெல்லி: வரி விதிப்பு மற்றும் நாடு கடத்தல் விவகாரத்தை அமெரிக்க அதிபரிடம் எழுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ்-தள பதிவில், “அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்கும் போது, இந்தியர்கள் அனைவருக்கும் மிகுந்த கவலை அளிக்கும் வரிவிதிப்பு மற்றும் இந்தியர்களை நாடு கடத்தும் விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்ப வேண்டும்.
அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிப்பது, எந்த நாட்டிற்கும் வரி விலக்கு இல்லை என்று கூறுவது இந்தியாவின் உற்பத்தியில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். கைகள் மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது அனைத்து இந்தியர்களிடையேயும் கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது. “எந்தவொரு இந்திய குடிமகனும் அவமானப்படுத்தப்படக்கூடாது, கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.