நீலகிரி மாவட்டத்தில் 15-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சேகரித்து, அதன்படி மார்ச் மாதத்துக்குள் 85-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை மூட திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலைக்கிராமங்களிலும், போக்குவரத்து வசதியில்லாத அடர்ந்த வனப்பகுதிகளிலும், அரசு பள்ளிகள் தான் மக்களின் ஒரே நம்பிக்கை. எனவே, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் பள்ளிகளை மூடுவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதாகவும் அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது.
திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் தரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியதால், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவை சிதைக்கும் இந்த செயலை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுவதை முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.