சென்னை: தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய வார்த்தைகள் இவை. ஆனால் அந்த பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என்பதே உண்மை. நாடு முழுவதும் உள்ள 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகியவை கட்டாய மொழிகள், மேலும் 6 முதல் 8-ம் வகுப்புகளில் அந்தந்த மாநில மொழிகள் விருப்பப் பாடங்களாக உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என்று RTI மூலம் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், 100 ஹிந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடமாக கற்பிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஒரே வகுப்பில் படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே தமிழாசிரியர் நியமிக்கப்படுகிறார். நியமனம் செய்தாலும், விருப்பப் பாடம் என்பதால், தமிழ் ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஒரு பள்ளியில் தமிழ் படிக்கும் மாணவர் வேறு பள்ளிக்கு மாறினால், ஆசிரியர் இல்லாமல் தமிழ் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், விருப்பப் பாடமான தமிழ் மதிப்பெண் பட்டியலில் இடம்பெறாததால் மாணவர்கள் தாங்களாகவே தமிழைத் தவிர்க்கும் நிலை உருவாகியுள்ளது. நிதிப் பிரச்னை உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் இல்லாத கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேண்டுமென்றே தமிழ் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டும் கல்வியாளர்கள், இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதே மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பவர்களின் நோக்கம் என்கிறார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மன், மாண்டரின் போன்ற மொழிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை தமிழுக்கு வழங்காமல், சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாக தேர்வு செய்ய அழுத்தம் கொடுப்பதாகவும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ் கற்பிப்பதை மாணவர்கள் விரும்பவில்லை எனக் கூறி தவிர்ப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்துபவர்கள் இனியாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று குரல் எழுப்புவார்களா என்பது தமிழ் ஆர்வலர்களின் கேள்வி.