புதுடில்லி: இந்தியா முழுவதும் பலவிதமான பாரம்பரிய பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதுபோல மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் மலைவாழ் பகுதியில் பிரபலமாக திகழ்வது டஸ்ஸர் சில்க். டஸ்ஸர் சில்க் என்பது கோவை சில்க் என்றும் அழைக்கப்படுகிறது.
வனங்களில் உள்ள மருதம், தேக்கு, ஜாமுன் மரங்களில் உள்ள இலைகளை தின்று வாழும் பட்டுபுழுக்கள் வெளியேற்றும் லார்வாக்கள் பட்டு நூலாக சேகரிக்கப்படுகிறது. டஸ்ஸர் பட்டு நூல் பார்க்க உயர் பளபளப்பு மற்றும் ஆழந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். டஸ்ஸர் பட்டு உற்பத்தி செய்வது என்பது மல்பரி பட்டுவை விட கடினமானது.
அதுபோல் இந்த பட்டு நூல் குட்டையானது. குறைந்த அளவே கிடைக்கக்கூடியது. ஆயினும் மதிப்புமிக்க பட்டு நூல் என்பதால் இதனால் உருவாக்கப்படும் சேலைகள் விலையும், தரத்திலும் மதிப்பு மிகுந்தவை. டஸ்ஸர் பட்டு நூல் கொண்டு உயர்ரக பட்டு சேலைகள், கைவினைப்பொருட்கள், சுடிதார், சல்வார் போன்றவை உருவாக்கப்படுகின்றன.
இரசாயன அச்சு கூடம் மூலம் பல வண்ணங்கள் ஏற்றப்பட்ட ஆடைகளும் விற்பனைக்கு வருகின்றன. டஸ்ஸர் பட்டு மூலம் உருவாக்கப்படும் புதிய வடிவமைப்பு ஆடைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒரு மாதத்தில் பத்து டஸ்ஸர் பட்டு புடவைகள் தான் உற்பத்தி செய்ய முடியும். மலைவாழ் மக்களால் வடிவமைக்கப்படுவதால் பாரம்பரிய டிசைன்களிலும் கலை வடிவங்களிலும் இச்சேலைகள் வருகின்றன. உடலுக்கு நல்ல காற்றோட்டத்தை தந்து அணிவதற்கு சுகமாய் இருக்கும் டஸ்ஸர் பட்டு சேலைகள் அனைத்து பருவ காலத்திலும், குறிப்பாக கோடைகாலத்தில் அணிவதற்கு ஏற்றது.
டஸ்ஸர் பட்டு சேலைகள் டிரை – வாஷ் செய்வதே உகந்தது. துவைத்த டஸ்ஸர் பட்டு புடவைகளை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து அடைத்து வைக்கக்கூடாது. காற்றோட்டமாய் திறந்த படி வைக்க வேண்டும்.