ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி 228 ரன்கள் சேர்த்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக தவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் ஜாக்கர் அலி இணைந்து 154 ரன்கள் சேர்த்துக் கொண்ட பார்ட்னர்ஷிப் அமைகின்றது.
இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நழுவவிட்ட ஒரு கேட்ச், இந்திய அணிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய பந்துவீச்சாளர் அக்சர் படேல், தனது ஓவரில் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது பந்தில் ஜாக்கர் அலியின் கேட்ச் ரோஹித் வசம் சென்றது. ஆனால், அந்த கேட்சை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அக்சர் தனது ஹாட்ரிக் வாய்ப்பை இழந்தார்.
பேட்டிங் தேர்வு செய்த வங்கதேச அணி தொடக்கத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. 8.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, பின்னர் ஹ்ரிடோய் மற்றும் ஜாக்கர் அலி இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். 43-வது ஓவரில் 68 ரன்கள் எடுத்த ஜாக்கர் அலி ஆட்டமிழந்தார். அதன் பின்னர், வங்கதேசத்தின் கீழ்மட்ட துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், தவ்ஹித் ஹ்ரிடோய் கடைசி வரை களத்தில் இருந்து சதம் அடித்தார். 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த அவர், ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்திய அணிக்கு வெற்றி பெற 229 ரன்கள் தேவை.