பெங்களூரு: நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கன்னத்தில் அறைய வேண்டும் என்று கூறிய கர்நாடக பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் மங்களூரு வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., பாரத் ஷெட்டி, நேற்று மாலை மங்களூரில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ”குஜராத் சென்றால், தீவிர சிவபக்தர் போல் காட்டிக் கொள்வார், அதே ராகுல். கேரளா சென்றால் மதச்சார்பற்றவராகவும், தமிழகத்தில் நாத்திகராகவும் மாறுவார்.
இந்துக்களும் இந்துத்துவாவும் வேறு என்று காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். அப்படி பேசுபவர்கள் எதிர்காலத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவார்கள். சிவாஜி மற்றும் மகாராணா பிரதாப் இருவரும் தேவை ஏற்படும் போது ஆயுதம் ஏந்தியிருந்தனர். அவர்களை வணங்கும் நாமும் அந்த ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் கதவுகளை சாத்திவிட்டு ராகுல் காந்தியின் கண்ணில் அறைய வேண்டும்.
அப்படிச் செய்தால் இனி இந்துக் கடவுள்களையும் இந்து மக்களையும் விமர்சிக்க மாட்டார். இல்லாவிட்டால், மங்களூருக்கு வரவழைத்து தாக்க வேண்டும்,” என, சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக துணை முதல்வர், டி.கே.சிவகுமார், முன்னாள் மத்திய அமைச்சர், வீரப்ப மொய்லி, சம்பவத்தை கண்டித்தது.
இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி மீது மங்களூர் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.