புதுச்சேரி பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் புகார்களை பகிர்வதற்காக புகார் பெட்டிகள் அமைக்கப்படவுள்ளதாக புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை வரும் பிப்ரவரி 24ம் தேதி துணை நிலை ஆளுநர் தொடங்கி வைக்கிறார்.
புதுவை தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டிஐஜி சத்தியசுந்தரம், மாணவர்களிடம் திருக்குறள் ஒப்புவிக்கும்போது, புகார் பெட்டி நடைமுறையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
புதுச்சேரி பள்ளிகளில் பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். தவறு செய்தவர்களை மறைக்காமல் சட்டத்தின் முன் நிறுத்த பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என டிஐஜி வலியுறுத்தினார்.
பள்ளிகள் முன்பாக சமூகவிரோதர்களை கண்காணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவர். மாணவர்கள் புகார்களை நேரடியாக தெரிவிக்க பயப்படாமல் இந்த புகார் பெட்டிகளை பயன்படுத்தலாம். தங்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று டிஐஜி தெரிவித்தார்.