அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பனாமாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பனாமா, நிகராகுவா, கோஸ்டா ரிகா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “அமெரிக்காவில் இருந்து பனாமா வந்துள்ள இந்தியர்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனை உறுதி செய்ய பனாமா அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பனாமா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் உதவி கோரிச் சத்தமிடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில், அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு பதிலளித்த பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ, “அமெரிக்காவுக்கும் பனாமாவுக்கும் இடையிலான இடம்பெயர்வோர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நாடு கடத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப சர்வதேச அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் வரை ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை,” என விளக்கமளித்துள்ளார்.
தற்போது, இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமாவில் தங்கவைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்கது.