எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளில் கல்வி வளாகம், புறநோயாளிகள் மருத்துவ சேவைகள், மாணவர் விடுதிகள், அத்தியாவசிய சேவைக் கட்டடங்கள் போன்ற முக்கிய வசதிகள் அடங்கிய கட்டிடங்கள் அடங்கும். பணிகள் துவங்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2025 நிலவரப்படி, முதல் கட்ட கட்டுமானத்தின் 24% நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும். முழு கட்டுமான திட்டமும் பிப்ரவரி 2027-க்குள் 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை மொத்த கட்டுமானத்தில் 14.5% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 900 படுக்கைகளில், 150 படுக்கைகள் தொற்று நோய்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மதுரையில் ஒரு கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி வளாகம், குடியிருப்பு வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட அரங்கம் ஆகியவை உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் நியமனமும் நடந்து வருகிறது.
ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எய்ம்ஸ் மதுரை மருத்துவக் கல்லூரி நிரந்தர வளாகத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எய்ம்ஸ் மதுரை மற்றொரு சுகாதார மையம் மட்டுமல்ல – தமிழகம் மற்றும் தென்னிந்திய மக்களுக்கு மேம்பட்ட மருத்துவம், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தரமான கல்வியை வழங்க உறுதிபூண்டுள்ளது,” என்றார்.