பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் தென்னைக்கு அடுத்தபடியாக பல்வேறு காய்கறிகள் மற்றும் மானாவாரி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில், வெண்டைக்காய், புடலங்காய், கத்தரி, பச்சை மிளகாய், தக்காளி, பூசணி உள்ளிட்ட பல காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையை எதிர்பார்த்து அதற்கேற்ப காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு கோடை மழை பெய்ததைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும், அதன்பிறகு வடகிழக்கு பருவமழையும் ஒன்றன் பின் ஒன்றாக பெய்தது.
இதனால், பொள்ளாச்சியை சுற்றியுள்ள பெரும்பாலான விளை நிலங்கள் உழுது, மண்ணின் தன்மைக்கேற்ப பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து பயிரிடப்பட்ட தக்காளி, பூசணி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், புடலங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் அறுவடை கடந்த மாத இறுதியில் இருந்து தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் பலர் அறுவடை செய்த நிலங்களை மீண்டும் உழுது காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து மழை இல்லாவிட்டாலும், மண்ணின் ஈரப்பதம் குறைந்த இடங்களில், தற்போது வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, விவசாயிகள் பலர், கிணற்று பாசனம் மூலம், விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகள் பலர் மானாவாரி பயிர்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட துவங்கியுள்ளதால், அவை வாடி வாடாமல் இருக்க சொட்டு நீர் பாசனத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். வரும் ஏப்ரலில் கோடை மழை துவங்கினாலும், அதுவரை தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டு நீர் பாசனம் மூலம் காய்கறிகள் சாகுபடி செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.