புதுடெல்லி: “இந்திய மொழிகளுக்கு இடையே எந்த பகைமையும் இல்லை. அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நமது பொறுப்பு” என்று பிரதமர் மோடி கூறினார்.
98வது அகில பாரத மராத்தி சம்மேளனம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இந்த நிகழ்வில் பங்கேற்று பேசியதாவது:
இந்திய மொழிகளுக்கு இடையே ஒருபோதும் பகை இருந்ததில்லை. மொழியின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நமது மொழியியல் பாரம்பரியம் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகிறது. மொழிப் பிளவுகளை ஏற்படுத்தும் தவறான கருத்துக்களைத் தவிர்த்து, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நமது சமூகப் பொறுப்பு.
அனைத்து மொழிகளும் ஒன்றையொன்று பாதித்து வளப்படுத்தியுள்ளன. இந்தியாவின் அனைத்து மொழிகளும் முக்கியம். மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவிக்கிறோம். ஆங்கிலப் புலமை இல்லாததால் திறமையை அங்கீகரிக்காத மனநிலையை நாங்கள் மாற்றியுள்ளோம்.
மொழியும் இலக்கியமும் சமூகத்தின் கண்ணாடி. இலக்கியமும் சமூகத்தின் திசையை வழிநடத்துகிறது. எனவே, மொழி மற்றும் இலக்கிய மாநாடுகள் மற்றும் இலக்கியம் தொடர்பான நிறுவனங்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன என்று மோடி கூறினார்.
முன்னதாக, விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தபோது, பிரதமர் மோடி, ‘இந்தி’ கூட்டணியின் முக்கியத் தலைவரான சரத் பவாரை விளக்கேற்ற அழைத்தார். மேலும், விழாவில் சரத் பவார் பேசிய பிறகு, மோடியும் அவரை இருக்கையில் அமர உதவினார், இது நெகிழ்ச்சியாக இருந்தது.