தஞ்சாவூர்: தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் கராத்தே பிளாக் பெல்ட் கிரேடிங் நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சாவூர் அன்னை சத்யா உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்களாக கராத்தே பிளாக் பெல்ட் கிரேடிங் மற்றும் முகாம் நடைபெற்றது. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு 3ம் நாளாக ராமநாதபுரம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கராத்தே பிளாக் பெல்ட் கிரேடிங் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், பல்லடம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சீனியர் கராத்தே மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கு பெற்றனர்.
பயிற்சிக்கு மலேசியாவில் இருந்து வந்த கிராண்ட் மாஸ்டர் ஹன்ஷி டாக்டர் டோனி பொன்னையா, சர்வதேச பயிற்சியாளர் டத்தோ ஷிகான் அறிவழகன் பொன்னையா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் சீனியர் பிரவுன் பெல்ட் மாணவர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி பெற்றவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட தலைமை பயிற்சியாளர் ஷிகான் ராஜேஷ் கண்ணா செய்திருந்தார்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், வருடத்திற்கு இருமுறை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலர் பெல்ட் பெறுகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கராத்தே பிளாக் பெல்ட் கிரேடிங் நடைபெறும். நான்கு வருடம் மாணவர்கள் பயிற்சி பெற்று எட்டு பெல்ட் லெவல் முடித்த பின்பு இந்த பிளாக் பெல்ட் பெற முடியும். மாணவர்கள் போட்டியில் பங்கு பெறுவதால் தன்னை ஆரோக்கியமாகவும். நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் தீய பழக்கத்திலிருந்து விடுபடவும் முடியும் என்று தெரிவித்தார்