2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முக்கியமான லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டியில், இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்குள் சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சவுத் ஷாகில் 62 ரன்களும், ரிஸ்வான் 46 ரன்களும் சேர்த்தனர். 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 244 ரன்கள் அடித்து அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் இந்திய அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அவர் வீசிய ஒன்பது ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரது இந்த ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை தகர்ந்துவிட்டது.
மேலும், இந்த மூன்று விக்கெட்டுகளுடன் சேர்த்து, சர்வதேச கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகிய மூன்று வடிவங்களிலும் சேர்த்து 300 விக்கெட்டுகளை அவர் பெற்றார். இது அவரது திறமையை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகும். தற்போது 30 வயதாகும் குல்தீப், சிறந்த ஃபார்மில் விளையாடி வந்தாலும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் அவர் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.