டிவிஎஸ் நிறுவனம் புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. புது டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில், நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.டிவிஎஸ் ஜூபிட்டர் சிஎன்ஜி கான்செப்ட் உலகின் முதல் சிஎன்ஜி இயங்கும் ஸ்கூட்டராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, ஒரு கிலோமீட்டர் பயணிக்க வெறும் ஒரு ரூபாயே செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் சீட்டின் கீழ் 1.4 கிலோ கொள்ளளவுடைய சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜியுடன் 84 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். மேலும், இதன் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி டேங்குகள் இரண்டையும் நிரப்பினால், மொத்தம் 226 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த மாடல் எரிபொருள் செலவை அதிகளவில் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நாள்பட்ட பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
அத்துடன், டிவிஎஸ் நிறுவனம் அட்வெஞ்சர் பைக்குகளின் வரிசையில் தனது அடுத்த முக்கிய முயற்சியாக அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ் 300 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் கேடிஎம் 250 அட்வெஞ்சர் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இந்த பைக் அமையும். 299.1 சிசி ஒருசிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜினை கொண்ட இந்த பைக் சக்திவாய்ந்த செயல்திறனை வழங்கும். இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதனால் மென்மையான கியர் மாற்றங்கள் கிடைப்பதுடன், மேம்பட்ட கட்டுப்பாட்டையும் வழங்கும். சாகச பயணங்களை விரும்பும் ரைடர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த இருசக்கர வாகனங்கள் இரண்டும் அடுத்த மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிவிஎஸ் நிறுவனம் தனது புதுமையான தொழில்நுட்பங்களையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளையும் கொண்டு வருவதை இந்த மாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. விற்பனைக்கு வந்தவுடன், இவை இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் டிவிஎஸ் நிறுவனத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.