சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஆலோசனை நடத்தினார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை முற்றிலும் தடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்பிகள் உள்ளிட்டோருக்கு அவ்வப்போது பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
இதையடுத்து இன்று காலை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக், நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் தர்மராஜன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி செந்தில் வேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்பு, பாலியல் பிரச்னை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களைத் தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.