தஞ்சாவூர்: கட்டுமான பணிக்கான எம்.சாண்ட், பி. சாண்ட் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
புதுக்கோட்டையை சேர்ந்த ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து கட்டுமான பணிக்கான எம் சாண்ட், பி சாண்ட் யூனிட் 1 க்கு 1500 ரூபாய் விலை உயர்த்தியதை கண்டித்தும், கனிம வளத்துறை அலுவலர்கள் லாரி ஓட்டுநர்களிடம் டிரான்ஸ்சிஸ்ட் பாஸ் இல்லை என்றால் லாரிகளை பறிமுதல் செய்தும் ஓட்டுநர்களை கைது செய்வதையும் கண்டித்தும் இன்று முதல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நெடுஞ்சாலை பணிகள் உள்ளிட்ட அரசு கட்டுமான பணிகளையும், வீடுகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் அனைத்தையும் நிறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தஞ்சையில் இன்று நடைபெற்ற அகில இந்திய கட்டுநர் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானத்து உள்ளனர்.
தஞ்சையில் அகில இந்திய கட்டுநர் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிருபர்களிடம் அகில இந்திய கட்டுநர் சங்க நிர்வாகி அய்யப்பன் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை கிரஷர் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் அமைத்து ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் விலையை 1 யூனிட்டுக்கு 1,500 ரூபாய் வரை உயர்த்தி விட்டனர்.
மேலும் ஜிஎஸ்டி வரி செலுத்தி எம் சாண்ட்டை ஏற்றி செல்லும் லாரிகளை கனிம வளத்துறை அலுவலர்கள் பிடித்து லாரிகளை பறிமுதல் செய்வதோடு, ஓட்டுநர்களை ஜாமினில் வரமுடியாத அளவில் வழக்கு போட்டு கைது செய்வதால் ஒட்டு மொத்த கட்டுமான பணிகளும் முடங்கி கிடக்கிறது.
தமிழக அரசு புதுக்கோட்டை கிரஷர் உரிமையாளர்களிடம் விலையை குறைத்திட வலியுறுத்தியும், டிரான்ஸ்சிஸ்ட் பாஸ் கெடுபிடியை கைவிடவும் வலியுறுத்தியும் இன்று (25ம் தேதி) முதல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை கட்டுமானப் பணி உள்ளிட்ட அரசு கட்டுமானப் பணிகளையும், வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டிட பணிகளையும் நிறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை தற்போது அதிகளவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எவ்வித முன்அறிவிப்பும் இன்றி விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பணிகளுக்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் வீடு உட்பட பல்வேறு கட்டுமானப்பணிகளில் போது வாக்குவாதம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் கட்டிட கட்டுமானத்தை மேற்கொள்பவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். பல பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் அரசு பணிகள் உட்பட பல்வேறு பணிகளும் முழுமையாக நிறுத்தப்படும் நிலை உருவாகி விடும். இதனால்தான் விலையை உயர்வை கண்டித்து இந்த காலவரையற்ற போராட்டம் நடத்தப்படுகிறது.