சம்பளத்தை குறைக்க வலியுறுத்தியும், கேளிக்கை வரி உயர்வைக் கண்டித்தும் ஜூன் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட கேரள தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. படப்பிடிப்பு நடத்தப்படாது, திரையரங்குகள் மூடப்படும், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாது என கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
இதற்கு அந்தோணி பெரும்பாவூர் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையாள திரையுலக சங்கமான ‘அம்மா’வை சேர்ந்த மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நேற்று முன்தினம் கொச்சியில் கூட்டம் நடத்தினர். தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ‘அம்மா’ வெளியிட்டுள்ள அறிக்கையில், மலையாள தயாரிப்பாளர்கள் ஒரு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திரையுலகம், ஒரு சிலரின் பிடிவாதத்தால் தேவையற்ற வேலைநிறுத்தத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பல தொழிலாளர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.