புதுடில்லி: சந்தை மதிப்பின் அடிப்படையில், சோனி கார்ப்பரேசன் குழுமம் தற்போது ஜப்பானின் இரண்டாவது பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த மிட்சுபிஷி நிறுவனம் 12.74 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் நிலைக்க, சோனி நிறுவனத்தின் மதிப்பு 12.99 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இன்னும் முன்னிலையில், டொயோட்டா நிறுவனம் 20.16 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
கடந்த 1946ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட சோனி நிறுவனம், ஆரம்ப காலத்தில் “டோக்கியோ சுஷின் கோக்யோ” என அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நாடு தழுவிய பொருளாதார மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, வெறும் எட்டு பணியாளர்களுடன் சிறிய மின்னணுவியல் கடையாக துவங்கியது. அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில், காலப்போக்கில், இது உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றிய வர்த்தக பிரிவு அதன் பிளேஸ்டேஷன் வணிகமாகும். சோனியின் கேமிங் துறையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி, நிறுவனத்தின் மொத்த வருவாயை பெருமளவு உயர்த்தியுள்ளது. 1994ஆம் ஆண்டு அறிமுகமான முதல் பிளேஸ்டேஷன் முதல், சமீபத்திய PlayStation 5 வரை, ஒவ்வொரு சந்தைப்படுத்தலிலும், இந்த கேமிங் கன்சோல் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளது.
மின்னணு சாதனங்கள், கேமிங், இசை, திரைப்பட தயாரிப்பு மற்றும் பிற பொழுதுபோக்கு துறைகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் சோனி நிறுவனம், சர்வதேச அளவில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.