சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் கவலைக்கிடமாக குறைந்து வருவதாக அரசு எச்சரித்து வருகிறது. முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இளம் வயதினரின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. 1980ஆம் ஆண்டு மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்காக அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு சீன அரசு மூன்று குழந்தைகள் கொள்கையை அறிவித்திருந்தாலும், பெரும்பாலான மக்கள் பழைய வழக்கத்தையே தொடர்கிறார்கள்.
குடும்ப அமைப்புகள் குறைவதைப் போல், திருமணங்களும் அதிக அளவில் குறைந்து வருகின்றன. 2024ம் ஆண்டில், வெறும் 60 லட்சம் தம்பதிகள் மட்டுமே திருமணம் பதிவு செய்துள்ளனர். இது 2023ம் ஆண்டை விட 20.5% குறைவாகும். 1986ஆம் ஆண்டு திருமண பதிவு கட்டாயமாக அறிமுகமான பின்னர், இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், திருமணமான தம்பதிகள் குழந்தைகள் பெறுவதைத் தவிர்க்கும் கலாச்சாரத்தையும் பின்பற்றி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையை சமாளிக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், திருமண வயதை 18 ஆக குறைக்கும் திட்டமும் உள்ளது. தற்போது பெண்களுக்கு 20, ஆண்களுக்கு 22 வயது திருமணத்திற்கான உகந்த வயதாக உள்ளது. அரசின் முயற்சிகளுக்கு கூடுதல் துணையாக, சில தனியார் நிறுவனங்கள் நேரடி முடிவுகளை எடுத்து வருகின்றன.
கிழக்கு சீனாவின் ஷான்டியான் கெமிக்கல் குரூப் நிறுவனம், தனது பணியாளர்களுக்கு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. 28 முதல் 58 வயதுக்கு இடைப்பட்ட திருமணம் செய்யாத ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள் திருமணம் செய்யாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக 1200 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்திற்குள் திருமணம் செய்யாதவர்களுக்கு சுயவிமர்சன கடிதம் எழுத வேண்டும். ஜூலை இறுதிக்குள் திருமணம் செய்யாவிட்டால், வேலை திறனை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் செய்யாதவர்களை வேலைவிட நீக்குவார்கள் என நிறுவனமே அறிவித்துள்ளது.
இந்த முடிவுகள் தனிநபர் உரிமையை மீறுவதாகவும், உறவுகளை கட்டாயப்படுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இருப்பினும், சீனாவில் மக்கள் தொகை குறைவு எதிர்கொள்ளும் சூழ்நிலையில், இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அரசும், தனியார் நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.