கோவை: கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான தடையில்லா சான்று இந்திய விமான நிலையம் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பு இறுதி செய்யும் பணிகளில் விளையாட்டு துறை தீவிரமாக செயல்படுகிறது. மேலும், மைதானம் குறித்த பொதுமக்களின் கருத்துகளும் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின்போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று திமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் செல்வ கணபதி வெற்றி பெற்றதன் பின்னர், தமிழக அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பணிகளை தொடங்கியது. முதற்கட்டமாக, மைதானத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.
பல்வேறு இடங்களில் ஆய்வு நடந்து, இறுதியாக ஒண்டிபுதூரில் அமைந்துள்ள திறந்தவெளி சிறைச்சாலை நிலத்தில் (20.72 ஏக்கர்) கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ததன் பின்னர், இந்த இடம் சிறைத்துறையிலிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.
திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அனுமதி வழங்கியது. தற்போதைய கட்டத்தில், மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் அடுத்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன மற்றும் அவரது ஒப்புதலுடன் இறுதி வடிவமைப்பு முடிவாகும்.
இதற்கிடையில், கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த மைதானத்தில் உணவகம், ஸ்போர்ட்ஸ் பார், கிளப் ஹவுஸ், உயர் தர இருக்கைகள், உட்புற பயிற்சி வளாகம், வீரர்களுக்கான ஓய்வறை, விரிவுரை அரங்குகள், விஐபி அரங்குகள், ஸ்பாஸ், கார்ப்பரேட் அறைகள், உடற்பயிற்சி கூடம், ரசிகர்களுக்கான பிரத்யேக நுழைவு வாயில் போன்ற வசதிகள் அமைய உள்ளன.
இந்த திட்டத்திற்கு டெண்டர் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. கோவையில் ஏற்கனவே ரஞ்சி டிராபி மற்றும் டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சர்வதேச மைதானம் உருவாகும் பட்சத்தில், கோவையில் சென்னைக்கு நிகராக சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகள் நடத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தொழில்துறை வளர்ச்சிக்கு பிறகு, விளையாட்டுத்துறையிலும் கோவை வளர்ச்சி பெறுவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.