கல்வியில் அரசியல் செய்யும் திமுகவும் பாஜகவும் கெட்டவர்கள் என்றுகூட அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்தபோதும், அக்கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்து இந்தி திணிப்பதை தவறு என சாடியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்கக் கூடாது என்றும், பொதுப் பட்டியலில் கல்வி இருந்தாலும், மத்திய அரசின் திட்டங்களை ஏற்கவோ மறுக்கவோ மாநில அரசுக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார். நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பாலோனோர் தாய்மொழியில் கல்வி பயின்றவர்கள் என்பதைக் குறிப்பிடும் அவர், மொழியை அரசியல் கருவியாக மாற்றக் கூடாது எனக் கூறினார்.
எந்த மொழியைக் கொண்டும் கல்வி பெற்று வளராகலாம், ஆனால், அதை கட்டாயமாக திணிப்பதை ஏற்க முடியாது என்ற அவர், கல்வியில் அரசியல் செய்வதற்காக இரு கட்சிகளும் போட்டியிடுவதாக குற்றம் சாட்டினார். தனியார் பள்ளிகளில் இந்தி படிக்கும் நிலையை உருவாக்கியதே தமிழக அரசியல்வாதிகளே என்றும் அவர் சாடினார்.
கல்வி தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி கொடுக்க மறுப்பது தவறு எனக் கூறினார். 1967-ல் மொழிப்போரால் ஆட்சிக்கு வந்த திமுக, இந்த நீண்ட கால ஆட்சியில் தமிழுக்காக என்ன செய்தது என கேள்வி எழுப்பினார். தமிழில் கல்வி தொடரும் உரிமையை பாதுகாக்க, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க அரசு எந்த நடவடிக்கை எடுத்தது என்பதையும் கேட்க வேண்டும் என்றார்.
திமுக அரசே கல்வியை வியாபாரமாக மாற்றி, தற்போது இந்திய திணிப்பு குறித்து அரசியல் செய்வது சரியா என அவர் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் எந்த மொழியிலும் கல்வி கற்கலாம், ஆனால், ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பது நியாயமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கல்வியை பற்றிய அரசியல் இன்னும் நீடிக்குமா, அல்லது அரசு மக்களின் உரிமைகளை பாதுகாக்க செயல்படுமா என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.