நாட்டின் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான வேலைகள் மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது, அரசு ஊழியர்களும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனடைகின்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ‘அடல் பென்ஷன் யோஜ்னா’ என்ற ஓய்வூதிய திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்தால், 60 வயதிற்குப் பிறகு மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், வேலையாட்கள் உள்ளிட்டோருக்காக ‘பிரதான் மந்திரி யோகி மந்தன் யோஜ்னா’ (PM-SYM) அமலில் உள்ளது. விவசாயிகளுக்கென ‘பிரதான் மந்திரி கிஸான் மந்தன் யோஜ்னா’ செயல்பட்டு வருகிறது. இதில் உறுப்பினராக இருந்து பணத்தை முதலீடு செய்தால், 60 வயதுக்கு பின் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஒரு புதிய பொதுவான ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது மாத சம்பளம் பெறுவோருக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், இபிஎப்ஓ (EPFO) போல கட்டாயத் தன்மையற்றதாக இருக்கும். விருப்பமானவர்கள் இதில் சேர முடியும். இதற்கான செலவில் மத்திய அரசு எந்த பங்களிப்பும் செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த திட்டத்தை வடிவமைக்க மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் பரிசீலனை நடத்தி வருகிறது. இதற்கான திட்ட வரைவை பிஎப் அமைப்பு தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவான ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் போது, தற்போதைய ஓய்வூதிய திட்டங்களும் இதில் ஒருங்கிணைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.