சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், வெற்றி பெறும் கட்டாயத்தில் லாகூரில் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 37 ரன்களில் 3 விக்கெட்களை இழந்தபோதிலும், இப்ராஹிம் ஜத்ரான் அபாரமாக ஆடி அணியை மீட்டார். அவர் 177 ரன்கள் குவித்து, சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் போட்டியில் அதிகபட்ச தனிப்பட்ட ரன் சாதனையை நிலைநாட்டினார். 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் சேர்த்த ஆப்கானிஸ்தான், போட்டியில் தெளிவான மேலாதிக்கம் செலுத்தியது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து, தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்தாலும், ஜோ ரூட் சதம் அடித்து அணியை மீட்டெடுத்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்ததால், 317 ரன்களில் அனைவரும் அவுட்டாகினர். தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்த இங்கிலாந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி, கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்குள் நுழையலாம்.