புதுடில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த மஹா கும்பமேளா விழா வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது. இந்த மாபெரும் நிகழ்வில் மொத்தமாக 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல் செய்துள்ளனர்.
இதையடுத்து, சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, மஹா கும்பமேளா நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் இந்த மாபெரும் நிகழ்வு, 45 நாட்கள் முழுவதும் நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த ஒரு யஜ்ஞமாக அமைந்தது.
மஹா கும்பமேளாவில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பது வெறும் சாதனையல்ல. இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக திகழ்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்த நிகழ்வு இந்திய மரபின் அடையாளமாக இருந்து வருகிறது. இன்று, பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளா உலகெங்கிலும் உள்ள மேலாண்மை வல்லுநர்கள், திட்டமிடல் வல்லுநர்கள் மற்றும் கொள்கை உருவாக்குபவர்களுக்கான ஆராய்ச்சி பொருளாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வு, பாரம்பரியத்தைக் கொண்டாடும் ஒரு புதிய இந்தியாவின் எழுச்சியை பிரதிபலிக்கிறது. புதிய சகாப்தம் ஒன்று உருவாகி வருகிறது, இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் காலம் இது. கும்பமேளாவில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தனர். இது ‘ஒற்றுமையான பாரதம், வலிமையான பாரதம்’ என்ற நோக்கத்தை உணர்த்தும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
இந்த ஒற்றுமை மற்றும் ஆன்மீக அலை நமது உள்ளங்களில் தொடர்ந்து வழிவிட வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையும், கலாசார அசைவுகளும் நம்மை மேலும் உயர்த்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.