அசாமின் மத்திய பகுதியில் நேற்று அதிகாலை 2:25 மணிக்கு 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் காத்திருந்தனர்.
இந்த நிலநடுக்கம் மோரிகாவ்ன் மாவட்டத்தில், குவாஹாட்டிக்கு கிழக்கே 52 கிலோமீட்டர் தொலைவில், 16 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அசாமில் பிரம்மபுத்ரா ஆற்றின் தெற்கு கரையில் உள்ள பகுதிகளில் அதிக அதிர்வுகள் உணரப்பட்டன.
அண்டை மாநிலங்களான மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய இடங்களிலும், வங்கதேசம், பூடான் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் பெரும்பாலான மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும், இதனால் உயிர்ச்சேதம் அல்லது பெரும் பொருளாதார சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
அசாம் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால், மக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரத்தை அரசு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.