நாடெங்கும் விவாதமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் தொடர்பான வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்த விவகாரம் 2016-ம் ஆண்டில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் எழுப்பிய கேள்வியால் ஆரம்பமானது. பின்னர், பாஜக தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் பிஏ மற்றும் எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளியிட்டார். இதன் பின்னணியில், ஆம் ஆத்மி உறுப்பினர் நீரஜ் சர்மா, ஆர்டிஐ மூலம் பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ்களை கோரினார். ஆனால், இந்த மனு நிராகரிக்கப்பட்டதால், அவர் மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார்.
மத்திய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, டெல்லி பல்கலைக்கழகம் பிரதமரின் பிஏ பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக 2017-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், நீதிமன்ற விசாரணையின் போது, டெல்லி பல்கலைக்கழகம் சார்பாக ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பிரதமர் மோடியின் பிஏ பட்டச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார். ஆனால் பொது அரங்கில் வெளியிட முடியாது” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நீதிபதி சச்சின் தத்தா, விசாரணை முடிந்துவிட்டதாகவும், தீர்ப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
2023-ம் ஆண்டு, குஜராத் உயர் நீதிமன்றம் பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ்கள் தேவையில்லை என்ற தீர்ப்பு வழங்கியது. மேலும், இதனை கேட்ட ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் மீண்டும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.