பொதுமக்கள் நடமாடும் இடங்களில் அனுமதி இல்லாமல் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ கொடிக்கம்பங்களை அமைக்க தடை விதிக்கப்படுவதாக கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சட்டவிரோதமாக பொது இடங்களில் கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றன. இதனை தடுக்க அரசு பல முறை உறுதி அளித்தும், அதனை முறையாக செயல்படுத்த தவறிவிட்டதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாநிலத்தில் எந்த பகுதியிலும் அதிகாரிகளின் அனுமதியின்றி புதிய நிரந்தர அல்லது தற்காலிக கொடிக்கம்பங்களை வைக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது.
இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உள்ளாட்சி துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். ஏற்கனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை இந்த உத்தரவை பெற்ற நாளிலிருந்து ஆறு மாதத்திற்குள் அகற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டுள்ளது.