சென்னை: இந்து சமய அறநிலையத்துறை மூலம் பழமையான கோவில்களில் பூஜைகள் நடத்துதல், கோவில்கள் மற்றும் குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆன்மிக யாத்திரைகளுக்கு அரசு மானியம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு இலவச ஆன்மிக யாத்திரைகளை பக்தர்களின் நலன் கருதி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும் தலா 500 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆண்டுதோறும் அரசு மானியம் வழங்கி வருகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, மானசரோவர் தரிசனம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியம் ரூ.40,000/-லிருந்து ரூ.50,000/- ஆகவும், முக்திநாத் தரிசனம் செய்பவர்களுக்கு அரசு மானியம் ரூ.10,000/-லிருந்து ரூ.20,000/- ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2024-2025 நிதியாண்டில் (01.04.2024 முதல் 31.03.2025 வரை) சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு ஆன்மீக யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்துக்கள் மட்டுமே, தங்கள் புனித யாத்திரையை முடித்துத் திரும்பும் இந்துத் துறையின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களைத் துறையின் www.tnhrce.gov.in <http://www.tnhrce.gov.in> என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் “கமிஷனர், இந்து சமய அறநிலையத் துறை, எண். 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், நுங்கம்பாக்கம், சென்னை,600034 என்ற முகவரிக்கு 30.04.2025–க்குள் அனுப்ப வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் (www.tnhrce.gov.in <http://www.tnhrce.gov.in>) தெரிந்துகொள்ளலாம். சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்குச் சென்ற தகுதியுள்ள பக்தர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.