சென்னை: சிவன் ஸ்தலங்களில் கால பைரவர் சன்னதி கண்டிப்பாக இருக்கும். இவருக்கென தனி சன்னதிகளும் உண்டு. நம்மை காத்து நிற்கும் கடவுளாக நமக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பவராக விளங்குபவர் காலபைரவர். இவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்.
தினந்தோறும் காலையில் பைரவரை வழிபட்டால் நோய் நீங்கும். மதியம் வழிபட்டால் நாம் நினைத்தவை நடக்கும், விரும்பியவை நிறைவேறும், மாலையில் வழிபட்டால் பாவம் தீரும். இரவில் வழிபட்டால் வாழ்வு வளம் பெறும்.
காலபைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்பு ஆகும். இதில் புனுகு, அரகஜா , ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ,பச்சை கற்பூரத்தை சேர்ப்பர். தாமரை, வில்வம், தும்பை, சந்தன மாலைகளை பைரவருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பாகும். செவ்வரளி, மஞ்சள் செவ்வந்தி வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வது விசேஷமாகும், மல்லிகை பூவை எக்காரணம் கொண்டும் பைரவருக்கு அணிவிக்கக் கூடாது.
செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் என்பர். இவரது இடது கையில் கோபாலத்துக்கு பதில் அட்சய பாத்திரம் இருக்கும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடிய பின் விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக காலபைரவரை தரிசித்தால் தான் யாத்திரைக்கான முழுப் பலன் கிடைக்கும்.