சென்னை: மெட்ராஸ் ஐஐடியில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான 2 நாள் தொழில்நுட்ப கண்காட்சி நேற்று தொடங்கியது. மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:- ஐஐடி-மெட்ராஸ் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதுமைத் துறைகளில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது. ஐஐடி-மெட்ராஸ், தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐஆர்எஃப்) தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த வகையில் இங்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறுவது பொருத்தமானது.
புதுமை, கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்முனைவு ஆகியவற்றில் முன்னணி மாநிலமான தமிழ்நாடு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய தொழில்துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவை தொழில்நுட்ப சக்தியாக மாற்றியதில் தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது. உலகளாவிய உற்பத்தித் துறையில் இந்தியா புதிய தலைவராக உருவெடுத்ததில் தமிழகத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகவும், ஸ்டார்ட் அப்களின் நாடாகவும் மாறும். அந்த இலக்கை விரைவாக அடைவதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புதுமை, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது ஆராய்ச்சி துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கணிசமான அளவு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டீன் மனு சந்தானம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) டிஜி சீத்தாராம், டிஆர்டிஓ இயக்குநர் ஜெனரல் (தொழில்நுட்பம்) மங்கள் லால் சந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் 85-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், ஏவுகணை தொழில்நுட்பம், சூரிய சக்தி, காற்றாலை ஆற்றல், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் மனித உருவ அம்சங்களைக் கொண்ட மனித உருவ ரோபோக்கள் தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் மாதிரிகளை காட்சிப்படுத்துகிறது. கண்காட்சி இன்று நிறைவடைகிறது.